குமார வெல்கம சஜித்துடன் இணைந்தார் - திங்கள் உடன்படிக்கை கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Friday, February 28, 2020

குமார வெல்கம சஜித்துடன் இணைந்தார் - திங்கள் உடன்படிக்கை கைச்சாத்து

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கட்சியின் அதிருப்தி அணியினருடன் இணைந்து (சுரகிமு ஸ்ரீலங்கா) நாட்டைப் பாதுகாப்போம் அமைப்பின் மூலம் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைந்து கொண்டார்.

கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற சந்திப்புக்களையடுத்து குமார வெல்கம ஆதரவு தரப்பினர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி சஜித் அணியுடன் இணையும் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்திலும் தெற்கில் ஒரு மாவட்டத்திலும் சில வேட்புமனுக்களை வழங்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நாளை மறுதினம் திங்கட்கிழமை நடக்கவிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் புரிந்துணர்வு உடன்படிக்கையின் போது சுரகிமு ஸ்ரீலங்கா சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் கைச்சாத்திடவிருக்கின்றார். 

குமார வெல்கமவுடன் முக்கியமான சிலர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் அக்கட்சியின் மேலும் சில அதிருப்தியாளர்கள் சஜித் தரப்புடன் இணைவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நேற்றுக் காலை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும் இணக்கத்தைத் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் இதில் பங்கேற்றனர். திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடும் வைபவத்தின் போது முஸ்லிம் காங்கிரஸும் கைச்சாத்திடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இது இவ்விதமிருக்க ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலின்போது ஆதரவளித்த சகல தரப்புகளும் முழு அளவில் ஒத்துழைக்க முன்வந்திருப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துகம பண்டார மற்றும் சில கட்சிகளும், சிவில் அமைப்புகளும் ஆதரவளிக்க முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment