எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான கூட்டணியின் சின்னம் தொடர்பான முரண்பாட்டிற்கு ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கப் பெறும் - News View

About Us

About Us

Breaking

Friday, February 21, 2020

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான கூட்டணியின் சின்னம் தொடர்பான முரண்பாட்டிற்கு ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கப் பெறும்

(ஆர்.விதுஷா) 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியின் பொதுத் தேர்தல் சின்னம் தொடர்பான முரண்பாட்டிற்கு ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கப் பெறும் என்று தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தாம் தயாராயிருப்பதாகவும், அதிலும் ஏதேனும் சட்டச்சிக்கல் காணப்படின் வேறு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். 

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, எமது கட்சிக்குள் காணப்பட்ட அனைத்து முரண்பாடுகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. 

இருப்பினும் சின்னம் தொடர்பில் முரண்பாடு காணப்படுகின்றது. இந்நிலையில் அன்னம் சின்னத்திற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த நிலையிலும் கூட சட்டச் சிக்கல் காணப்பட்டது. ஆகவே, நாம் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தயாராகவுள்ளோம். 

சஜித் பிரேமதாசவினுடைய தந்தை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தே உயிர்த்தியாகம் செய்தவர். ஆகவே, அவருடைய புதல்வருக்கும் யானை சின்னத்தில் உரிமை உண்டு. இருப்பினும், யானை சின்னத்திலும் ஏதேனும் சட்டச்சிக்கல்கள், முரண்பாடுகள் காணப்படின் வேறு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கவனம் செலுத்துவோம். 

நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப தயாராகியுள்ளனர். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த 69 இலட்சம் மக்களில் 10 இலட்சம் பேர் வரையில் இந்த அரசாங்கத்தை எதிர்க்க தயாராகியுள்ளனர். 

ஆகவே, இந்த சின்னம் தொடர்பிலான பிரச்சினைக்கு ஓரிரு தினங்களுக்குள் தீர்வு காணப்படும். கடந்த பொதுத் தேர்தல்களில் யானை சின்னத்திலேயே நாம் போட்டியிட்டோம். ஜனாதிபதி தேர்தல்களின் போதே அன்னம் சின்னத்தில் போட்டியிட்டோம். ஆகவே, யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment