நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான சதியா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - முஜிபுர் ரஹூமான் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 23, 2020

நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான சதியா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - முஜிபுர் ரஹூமான்

(செ.தேன்மொழி) 

நல்லாட்சி அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதற்காகவா உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹூமான் தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தல் காலத்திலே நல்லாட்சி அரசாங்கத்திக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பிரதாமானது உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலை குண்டுத் தாக்குதலாகும். எதிர்த்தரப்பினர் ஐக்கிய தேசிய முன்னணி மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் எடுத்துக் காட்டினர். இது எமது கட்சிக்கு மாத்திரமன்றி, எமது ஜனாதிபதி வேட்பாளருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தற்போது வெளிவரும் தகவல்களை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் நல்லாட்சி அரசாங்கத்தை இலக்கு வைத்துத்தானா இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. 

தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, நாட்டில் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்ததாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். இவ்வாறு தாக்குதல் தொடர்பில் முன்னரே தகவல் கிடைக்கப் பெற்றபோதிலும் அது தொடர்பில் கவனம் செலுத்தாது இருந்தமைக்கு காரணம் என்ன? 

ஜனாதிபதியே முப்படைகளின் தளபதியாக செயற்பட்டார். பாதுகாப்பு அமைச்சும் அவரிடமே இருந்தது. இதேவேளை பாதுகாப்பு சபையின் கூட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த எவருக்கும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்திருக்கவில்லை. 

அடிப்படைவாதிகள் எனக்கூறப்படும் சஹ்ரான் தலைமையிலான குழுவினர் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளிலே வளர்ந்து வந்துள்ளனர் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. இதனை அரச தரப்பு அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். 

இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, சஹ்ரானை கைது செய்ய முற்படும் போது அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவையும் கொலை செய்யதிட்டமிட்டுள்ளதாகக் கூறி அவரை கைது செய்தனர். 

இந்த நாலக்க சில்வா தொடர்பில் முறைப்பாடளித்த நாமல் குமார என்ற நபர் ஜனாதிபதி செயலகத்திலேயே ஊதியம் பெற்று வந்துள்ளார். இவருக்கும் ஜனாதிபதி செயலகத்திற்குமான தொடர்பு என்ன? ஏன் அவருக்கு இவ்வாறு ஊதியம் அளிக்கப்பட்டது என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

அதுமாத்திரமன்றி தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவிற்கு இந்த நாட்டில் முஸ்லீம் மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை. இதனால் இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவான விசாரணைகள் வேண்டும். 

இவற்றை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் சஹ்ரானை நல்லாட்சியை தோல்வியடைய செய்வதற்காக பயன்படுத்தியுள்ளார்களா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான 5 மாத இடவெளியிலே தாக்குதல்களும் இடம்பெற்றன. எனவே இது ஒரு சூழ்ச்சிகர செயலாக இருக்கலாம் என்றே நாங்கள் கருதுகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment