பயங்கரவாத தடைச் சட்டத்தை இதுவரை இலங்கை ஏன் நீக்கவில்லை - ஐ.நா.பேரவையில் இலங்கையின் அங்கத்துவம் குறித்து மீள் பரிசிலனை செய்யவும் - News View

About Us

About Us

Breaking

Friday, February 28, 2020

பயங்கரவாத தடைச் சட்டத்தை இதுவரை இலங்கை ஏன் நீக்கவில்லை - ஐ.நா.பேரவையில் இலங்கையின் அங்கத்துவம் குறித்து மீள் பரிசிலனை செய்யவும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40/1, 34/1 மற்றும் 30/1 பிரேரணைகளுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதானது வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் உலகம் பூராகவும் உள்ள மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளதென முன்னாள் வட மாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

எனினும் இவ்வாறான முடிவு வியப்படையத்தக்கதொன்றல்ல. தொடர் பத்தாண்டு கால கட்டத்தின் முடிவே ஜெனிவாவில் அமைச்சர் திணேஸ் குணவர்த்தன வெளியிட்ட அறிவிப்பு எனவும் தெரிவித்தார். 

இது தொடர்பில் முன்னாள் வட மாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சர்வதேச சமூகத்தினர் முன்னிலையில் தொடர்ந்து பத்தாண்டு காலமாக தனது கடப்பாடுகளைத் ஏற்றுவந்த இலங்கை அதே தொடர் ஒழுங்குடன் அவற்றிற்கு மதிப்புக் கொடுக்கத் தவறி வந்துள்ளது. 

உண்மையில் முதல் இரு வருடங்கள் முடிந்து மேலும் கால அவகாசம் கொடுக்க விழைந்தபோது அக்காலகட்டத்தில் எம்முட் சிலர் அமெரிக்க பிரதிநிதியைச் சந்தித்து கடந்த இரு வருடங்களில் கண்கூடாக முன்னேற்றத்தைக் காணமுடியாத நிலையில் மேலும் கால அவகாசம் கொடுப்பது அவசியமா என்று கேட்டிருந்தோம். 

தன் பாற்பட்ட பல கடப்பாடுகளை நிறைவேற்றாத இலங்கை, போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை சம்பந்தமாகப் பதிலளித்தலுக்கான பொறிமுறையொன்றை உருவாக்க தொடர்ந்து மறுத்து வந்தமை அதன் பிழையான செயல்களுள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. 

“பிரிவினைப் பயங்கரவாதம் சார்பாக 2009 மே மாதம் தொடக்கம் இன்று வரையில் இலங்கையில் ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை” என்று பெருமையுடன் கூறிய மதிப்பிற்குரிய அமைச்சர் திணேஸ் குணவர்த்தன அவர்கள் அப்படியாயின் ஏன் 1979 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாத (தற்காலிக)த் தடைச் சட்டத்தை இதுவரை இலங்கை கைவாங்கத் தவறியுள்ளது என்பது பற்றிக் காரணம் கூறத் தவறியுள்ளார். 

“புதிய” கற்றுணர்ந்த பாடங்கள், மீள் நல்லிணக்க சமரச ஆணைக்குழுக்களை நியமிப்போம் என்று 2010 இல் கூறிய கூற்றின் மறு உருவமே நேற்றைய தினம் (27.02.2020) உள்ளக விசாரணை ஆணைக்குழுவை நியமிப்போம் என்று ஜெனிவாவில் கூறிய கூற்று. 

இவ்வாறான உள்ளக விசாரணை ஆணைக்குழுவை அமைப்போம் என்ற இலங்கையின் புதிய கூற்று நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இனிவரும் பத்து வருடங்களில் கூட உண்மையைக் கண்டறிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாது என்பதே யதார்த்தம். 

இலங்கையின் இவ்வாறான வாக்குறுதிகள் மதிப்பற்ற வாக்குறுதிகள். காரணம் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து வந்துள்ள சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களுக்கு என்றுமே இருந்ததில்லை. 

எனவே ஐக்கிய நாடுகளின் ஒருமித்த கருத்தை உதாசீனம் செய்யும் இந்தச் செயற்பாடு சம்பந்தமாக போதுமான பதில் நடவடிக்கையை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும் என்பதே எமது திடமான வேண்டுகோள். 

தனது உலகளாவிய நியாயாதிக்க அதிகாரத்தைப் பாவிக்க வேண்டிய கடப்பாடு தற்போது சர்வதேச சமூகத்தைச் சார்ந்துள்ளது. அதைப்பாவித்து மிகக் கொடூரமான இவ்வாறான குற்றங்களைப் பற்றி ஆராயும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் அல்லது அதே மாதிரியான அதிகாரம் கொண்ட வேறு மன்றங்களின் முன் இலங்கையின் படையணியினரின் பணியாளர்களை நிறுத்த சர்வதேச சமூகமானது முன் வர வேண்டும். 

ஐக்கிய நாடுகள் பிரேரணைகளைத் தொடர்ந்து மதிக்காது மீறி வந்துள்ள இலங்கையின் நடத்தையையும் நாட்டின் மக்களிடையே குறிப்பிடட சில பகுதியினருக்கு எதிராக அரசாங்க அனுசரணையுடன் பல காலமாக நடாத்தி வந்த தவறான செயல்பாடுகளையும் கணக்கில் எடுக்கும்போது இலங்கையை ஐக்கிய நாடுகள் பட்டய உறுப்புரை 6 இன் கீழ் முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்றே நாம் நம்புகின்றோம். 

குறித்த உறுப்புரை 6 பின்வருமாறு 
“தற்போதைய பட்டயத்தில் கூறப்பட்டிருக்கும் கோட்பாடுகளைத் தொடர்ந்து மீறிச் செயற்படும் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் ஒருவரை பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் குறித்த நிறுவனத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் வெளியேற்ற முடியும்” 

எனவே பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் பொது சபையானது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இலங்கை தொடர்ந்து உறுப்புரிமை கொண்டு நிலைக்க வேண்டுமா என்பதை மீள் பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம். 

இன்று வரையில் இலங்கை உலகை உதாசீனம் செய்து வந்துள்ளது. உலகானது நடவடிக்கை எடுக்க இப்போது தருணம் உதயமாகியுள்ளது. ஒரு உறுப்பு நாடு தனது கடப்பாடுகளை மீற இன்று ஐக்கிய நாடுகள் இடமளித்தால் நாளை இந்த உலக நிறுவனத்தின் சாவு மணியைக் கேட்க நேரிடும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment