இதயம், அன்னம், யானை என்று சின்னம் எதுவானாலும் தேர்தல் பதிவு செய்யப்பட்ட கூட்டணியில்தான்! - மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Friday, February 14, 2020

இதயம், அன்னம், யானை என்று சின்னம் எதுவானாலும் தேர்தல் பதிவு செய்யப்பட்ட கூட்டணியில்தான்! - மனோ கணேசன்

தேர்தலில் சின்னம், இதயம், யானை என்ற இரண்டும் இல்லை என்றால், "அன்னப்பறவை" யை ஏற்றுக்கொள்வோம். ஆனால், தேர்தலை பதிவு செய்யப்பட்ட கூட்டணியிலேயே சந்திப்போம். கூட்டணி தலைவராக சஜித் பிரேமதாசவும், கூட்டணி தலைமைக்குழுவில் ஐதேக பிரதிநிதிகளுடன் கூட்டணி பங்காளி கட்சி தலைவர்களும் இடம்பெறுவோம். கூட்டணியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டாரவும், வேட்பாளர் தெரிவுக்குழுவின் தலைவராக சஜித் பிரேமதாசவும் செயற்படுவார்கள். இவை எங்கள் இந்த குறைந்தபட்ச நிலைப்பாடுகள். இவற்றை ஐதேக செயற்குழு ஏற்கும் என நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் எம்பி கூறினார்.

புதிய எதிரணி கூட்டணி தொடர்பில் கருத்து கூறிய மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, பதிவு செய்யப்பட்ட கூட்டணி, கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, தலைமைக்குழுவில் பங்காளி கட்சி தலைவர்கள், பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார, வேட்பாளர் தெரிவுக்குழு தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய எங்கள் குறைந்தபட்ச நிலைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், சஜித் பிரேமதாச தலைமையிலான பெரும்பான்மை ஐதேக அணியினரும், அனைத்து பங்காளி கட்சிகளும், இணைந்து நாம் ஏற்கனவே பதிவு செய்து, தயார் நிலையில் வைத்திருக்கும் எமது கூட்டணியின், "இதயம்", சின்னத்தில் பொது தேர்தலை நாம் சந்திப்போம்.

இதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. இந்த நிலைப்பாட்டிலேயே சஜித் பிரேமதாசவும், அனைத்து கூட்டணி பங்காளி கட்சி தலைவர்களும் இருக்கின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சி, கூட்டணியில் பிரதான கட்சி. அந்த கட்சி பிளவுபடக்கூடாது. இதில் நாம் மிகவும் அக்கறை கொண்டு இருக்கிறோம். உண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள், பெரும்பான்மை முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், இன்றைய உள்ளூராட்சி மன்ற பெரும்பான்மை உறுப்பினர்கள், பெரும்பான்மை கடைநிலை உறுப்பினர்கள் சஜித் அணியுடன்தான் இருக்கின்றார்கள். நாங்களும் அவர்களுடன் இருக்கின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடக்கூடாது என்ற சஜித் தலைமையிலான எமது ஒட்டுமொத்த நல்லெண்ணத்தை எவரும் எமது பலவீனமாக கருதி எம்முடன் விளையாட முயலக்கூடாது. அப்படியான விளையாட்டு முயற்சியில் எவரும் ஈடுபட்டால், சஜித் பிரேமதாச தலைமையிலான எமது கூட்டணியின் இதயம் சின்னத்தில் நாம் நிச்சயம் களமிறங்குவோம். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து விட்டன.

பதிவு செய்யப்பட்ட கூட்டணி, கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார, வேட்பாளர் தெரிவுக்குழு தலைவர் சஜித் பிரேமதாச, என்பவை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானங்கள்தான். இன்று இவற்றில் இருந்து பின்வாங்குவது யார் என மக்களுக்கு தெரியும். எங்களுடன் முரண்படுகின்றவர்கள் யார் என மக்களுக்கு தெரியும். ஐதேக பிளவுப்படுமானால், அதற்கான முழு பொறுப்பை எம்முடன் முரண்படுகின்றவர்கள்தான் ஏற்க வேண்டும். இப்படி செய்து ஆளும் அரசாங்கத்தை மகிழ்ச்சியடைய செய்து, அரசாங்கத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்து விட வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை கேட்டுக்கொள்கிறேன். 

No comments:

Post a Comment