பல்கலைக்கழக மாணவர்களுக்கான தங்குமிடம் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும் - உங்கள் படிப்பை நீங்கள் சரியாக செய்யுங்கள், மற்றத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தங்குமிடம் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும் - உங்கள் படிப்பை நீங்கள் சரியாக செய்யுங்கள், மற்றத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற மலையக மாணவர்களுக்கு தங்குமிடம் அமைப்பதற்கு காணியொன்றை அடையாளப்படுத்திக் கொடுக்குமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதனிடம் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு காணிகளை வழங்கினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தங்குமிடமொன்றை விரைவில் அமைத்துக் கொடுக்கப்படுமென்றும் தெரிவித்த தொண்டமான் எந்தச் சந்தர்ப்பத்திலும் எதற்கும் சலனப்படாமல் மாணவர்கள் கல்வியைத் தொடர வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற மலைய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, எமது மலையகத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த உதவிகளை வழங்கி வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதேபோன்று இன்னும் பல உதவிகளை இந்த மாணவர்களுக்கு வழங்குவதற்கும் தயாராகவே இருக்கின்றேன். அதற்கமைய என்னுடைய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றேன்.

குறிப்பாக கடந்த முறை மாணவர்கள் என்னைச் சந்தித்த போது தமக்கான புத்தகங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் தொடர்பில் கேட்டிருந்தனர். இதற்கமைய புத்தகங்களை பெற்றுக் கொடுத்திருந்த நிலையில் தற்போது துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வைக்கின்றேன்.

அதே நேரத்தில் யாழிலிருந்து மலையகத்திற்கான பேருந்து சேவை தொடர்பிலும் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தமை தொடர்பில் விசேட கவனத்தைச் செலுத்தியிருக்கின்றேன். அந்தப் பிரச்சனையையும் விரைவில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு உங்களுக்கான வசதி வாய்ப்புக்களை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம். அதற்கமைய நிச்சயம் செய்து கொடுப்போம். ஆனால் நீங்கள் எதற்காகவும் எப்போதும் உங்கள் கல்வியை இடைவிடாது தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். ஆகவே நீங்கள் உங்கள் படிப்பை சரியாக செய்தாலே போதுமானது. மற்றத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் அண்மையில் இந்தியா சென்ற போது இந்தியாவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்திருந்தேன். இந்திய அரசிடம் ஏற்கவே பல உதவிகளை நாம் பெற்றிருக்கின்றோம். ஆனால் தொடர்ந்தும் எமக்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்டிருக்கின்றோம். அதற்கமைய அவர்களும் எமக்கு உதவிகளைச் செய்வதாகவே தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக பல ஆயிரம் வீட்டுத் திட்டங்களை இந்தியாவிடம் இருந்து நாங்கள் பெற்றிருக்கிறோம். அதேபோன்று வீட்டுத் திட்டங்களை இம்முறையும் கேட்டிருக்கிறேன். குறிப்பாக மலையகத்திற்கு மட்டுமல்லாமல் வடக்கிற்கும் சேர்த்துதான் வீடுகளைக் கேட்டிருந்தேன். எங்களுக்கு ஏற்கனவே பல உதவிகளைச் செய்த வருகின்ற இந்திய அரசாங்கம் இந்த உதவிகளையும் வழங்குவதாக கூறியிருக்கின்றமை சிறப்பானது.

இவ்வாறு நாம் மக்களுடைய தேவகைள் பிரச்சினைகளை அறிந்து அதற்குரிய தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றோம். ஆகவே எங்களது மூலதனமாக இருக்கின்ற கல்வியை தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதனூடக சிறந்த முறையில் முன்னேற்றமடைய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment