மூன்று வருட சேவைக் காலம் சேர்த்துக் கொள்ளப்படாதமையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஜனாதிபதிக்கு மகஜர் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

மூன்று வருட சேவைக் காலம் சேர்த்துக் கொள்ளப்படாதமையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்

(எம்.நியூட்டன்) 

வட மாகாணம் வன்னிப் பகுதிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களது சேவைக் காலத்துடன் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட காலத்திலிருந்து சேவையாற்றிய முதல் மூன்று வருட சேவைக் காலத்தை வட மாகாணக் கல்வி அமைச்சு அவர்களது சேவைக் காலத்துடன் சேர்த்துக் கொள்ளப்படாதமையால் அவர்களுக்கு உரிய காலத்தில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள ஏற்றம் என்பன கிடைக்காதமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இதனைச் சுட்டிக்காட்டி தாம் சேவையாற்றிய மூன்று வருட சேவைக் காலத்தை தமது சேவைக் காலத்துடன் சேர்த்துக்கொள்ள ஆவன செய்யுமாறு கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த காலத்தில் இவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நியாயமானது என ஏற்றுக்கொண்ட நல்லாட்சி அரசாங்கம் இவர்களது மூன்று வருட சேவைக் காலத்தைச் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுத்திருந்த நிலையில் ஆட்சி மாறியதன் பின்னர் அவ்விடயம் கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'வட மாகாணத்தில் கடந்த 01.07.2013 இல் ஆசிரியர் நியமனம் கிடைத்து ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்ட எமது சேவைக் காலத்தை 01.08.2016 இல் இருந்து தற்போது கணிக்கப்பட்டுள்ளது. இதனால் எமது சேவைக் காலம் மூன்று வருடங்களால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக எமது பதவி உயர்வு, சம்பள ஏற்றம் போன்ற வற்றிலும் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். 

கடந்த யுத்த காலம் உள்ளடங்கலாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா வடக்கு, வடமராட்சி கிழக்கு, மடு ஆகிய கல்வி வலயங்களின் கீழ் உள்ள பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கடந்த 15 வருடத்திற்கும் மேலாக எவ்வித கொடுப்பனவுமற்ற நிலையில் தொண்டர் ஆசிரியர்களாகச் சேவையாற்றிய எமக்கான நிரந்தர ஆசிரியர் நியமனம் அப்போது வழங்கப்படாது நாம் மட்டுமே புறக்கணிக்கப்பட்டிருந்தோம். 

கடந்த 2009 ஆம் ஆண்டு வட மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது கூட கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற அரச கட்டுப்பாடற்ற பகுதியில் வசித்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த நிலையில் செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தொண்டர் ஆசிரியர்கள் எவருக்குமே நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படாது நாம் மட்டும்தான் புறக்கணித்து ஒதுக்கப்பட்டிருந்தோம். 

நிரந்தர நியமனத்தில் நாம் தொடர்ந்தும் புறக்கணித்து ஒதுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி எமக்கான நியமனத்தை வலியுறுத்தி நாம் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டம் காரணமாக கடந்த 01.07.2013 இல் எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதாகக் கூறி வட மாகாணக் கல்வி அமைச்சால் ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளையும் முடித்து பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக வெளியேறியுள்ளோம். 

இந்நிலையில் எமது முதல் நியமனத் திகதி 01.07.2013 என இடப்பட்ட போதிலும் தற்போது எமக்கு ஆசிரியர் சேவை தரம் 3-I வழங்கப்பட்ட 01.08.2016 திகதியிலிருந்தே எமது முதல் நியமனத் திகதியாகக் கருதி எமது சேவைக் காலத்தில் 3 வருடங்கள் குறைக்கப்பட்டு சேவைக் காலம் கணிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவேயும் வட மாகாணத்தில் நியமனம் வழங்கப்படும் போது புறக்கணிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நாம் தற்போதும் நியமனம் கிடைத்துச் சேவையாற்றிய எமது சேவைக் காலத்தில் 3 வருடத்தைச் சேர்க்காமல் விட்டுள்ளமையால் ஆசிரியர் சேவையில் எமது பதவி உயர்வு, சம்பள ஏற்றம் போன்றவற்றிலும் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இப்படியாக 400 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். 

எனவே எமது சேவைக் காலம், வயது என்பவற்றினைக் கருத்திற்கொண்டு எமக்கு வட மாகாணக் கல்வி அமைச்சால் நியமனம் வழங்கப்பட்ட 01.07.2013 இல் இருந்து எமது சேவைக் காலத்தை ஆசிரியர் சேவை தரம் 3-II ஆகக் கணித்து விடப்பட்டுள்ள எமது 3 வருட சேவைக் காலமும் சேர்க்கப்பட ஆவன செய்யுமாறு தங்களை நம்பிக்கையோடு மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம். 

இது தொடர்பில் கடந்த காலத்தில் பலரிடமும் முறையிட்டும் தீர்க்கப்படாது காலங்கடத்தப்பட்டு வந்த நிலையில் தாங்கள் இதனைத் தீர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment