குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நிரந்தர தீர்வொன்றை வழங்குவார் - மேல் மாகாண ஆளுனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

குப்பைகளை அகற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நிரந்தர தீர்வொன்றை வழங்குவார் - மேல் மாகாண ஆளுனர்

(எம்.மனோசித்ரா) 

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் குப்பைகளை அகற்றல் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வொன்றை வழங்குவார் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த மேல் மாகாண ஆளுனர் சீதா அரம்பேபொல, இதை தேசிய பிரச்சினையாகக் கருதி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை அண்மித்த பகுதியில் காணப்படும் சீதுவை குப்பை மேட்டில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. குறித்த இடத்துக்கு இன்று நேரடி விஜயம் மேற்கொண்டிருந்த ஆளுனர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள தீ ஏனைய பிரதேசங்களுக்கு பரவாமல் கட்டுக்கப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இது நிரந்தர தீர்வாகாது. எனவே இது தொடர்பில் ஆராயந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ குப்பை பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணுதல் பற்றி அவதானம் செலுத்தியுள்ளார். எதிர்வரும் இரு மாத காலத்திற்குள் ஜனாதிபதியின் நேரடி தலையீட்டில் இந்த பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சூழலியலாளர்களின் தீர்வும் வரவேற்கப்படுகின்றது. 

தற்போது இந்த பகுதியில் தீப்பற்றியுள்ளது என்பதற்காக இங்குள்ள குப்பைகளை அகற்றி பிரிதொரு இடத்தில் இடுவது பொறுத்தமான தீர்வாகாது. அது மேலும் பிரச்சினைகளையே தோற்றுவிக்கும். 

எனவேதான் இதற்கான நிரந்தர தீர்வினை வழங்க எதிர்பார்க்கின்றோம். இந்த குப்பைமேடு 1991 ஆம் ஆண்டிலிருந்து காணப்படுகிறது. எனவே ஓரிரு மாதங்களுக்குள் இதனை அப்புறப்படுத்த முடியாது. 

நிரந்தரமாக இவற்றை எவ்வாறு அகற்றுவது என்பது பற்றியே சிந்திக்க வேண்டும். இதனையொரு தேசிய பிரச்சினையாக எண்ணி அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான தீர்வினைக் காண வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment