ஜெனீவா பிரேரணை குறித்த அரசாங்கத்தின் முடிவினால் இலங்கை சர்வதேசத்தின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் : தேர்தலை இலக்கு வைத்துதான் இடைக்கால கணக்கறிக்கை தயார் செய்யப்படதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது - News View

About Us

About Us

Breaking

Friday, February 21, 2020

ஜெனீவா பிரேரணை குறித்த அரசாங்கத்தின் முடிவினால் இலங்கை சர்வதேசத்தின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் : தேர்தலை இலக்கு வைத்துதான் இடைக்கால கணக்கறிக்கை தயார் செய்யப்படதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

(செ.தேன்மொழி) 

ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தின் எதிர்ப்பை இலங்கை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய, இதன் காரணமாக சர்வதேசத்திடமிருந்து கிடைக்கப் பெறும் உதவிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து அதில் கிடைக்கும் நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முயற்சித்ததோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

கடந்த அரசாங்கத்தில் வெளியிடப்பட்ட வரவு செலவு திட்டத்தில் அரச செலவுகளுக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் அரசாங்கம் தமக்கு மேலும் 367 ரூபா பில்லியன் நிதியை பெற்றுக் கொடுக்குமாறு குறிப்பிட்டே கணக்கறிக்கையை தயார் செய்தது. 

அரசாங்கத்தினால் புதிய செயற்திட்டங்கள் கொண்டுவரப்படாத நிலையில் இந்த நிதிக்கான அவசியம் என்ன? அரசாங்கம் இதிலுள்ள சிக்கல்களை கருத்திற் கொண்டுதான் அதனை சபையில் சமர்ப்பிக்காமல் இருந்துள்ளது. அவ்வாறு சமர்ப்பித்திருந்தாலும் அது பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கும். 

இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்துதான் அரசாங்கம் இந்த இடைக்கால கணக்கறிக்கையை தயார் செய்திருக்குமா என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும். 

கடந்த அரசாங்கத்தில் மக்களின் நலன் கருதி பல சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய அரசாங்கம் அதனை செய்யாது இருக்கின்றது. தேர்தல் பிரசாரங்களின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் கூட அரசாங்கம் நிறைவேற்றாது இருக்கின்றது. 

பெறுமதிசேர் வரியை குறைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. ஐக்கிய தேசியக் கட்சி அதிக வருமானம் ஈட்டும் நபர்களிடமிருந்தே வரியை அறவிட்டது. ஆனால் தற்போதைய அரசாங்கம் வற் வரியை குறைத்து அவர்களுக்கு சலுகையை பெற்றுக் கொடுத்துள்ளது. 

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார். இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எந்த முயற்சியையாவது எடுத்துள்ளாரா? 

ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் சர்வதேசத்திடமிருந்து எமக்கு கிடைக்கும் உதவிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கின்றது. 

சர்வதேசத்திடம் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்பதற்காகவே ஜெனீவாவின் பிரேணைக்கு இணை அனுசரணை வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டால் சர்வதேசத்தின் எதிர்ப்பை இலங்கை சந்திக்க நேரிடும். 

2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment