அரசாங்கத்திடம் முறையான செயற்திட்டமில்லை அதனால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போகும் - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

அரசாங்கத்திடம் முறையான செயற்திட்டமில்லை அதனால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போகும்

(ஆர்.விதுஷா) 

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் முறையான செயற்திட்டம் இன்மையினால் அவர்களினால் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் பொதுத் தேர்தலில் அண்ணளவாக 90 ஆசனங்களை பெற்றுக் கொண்டாலே ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க கூடியதாகவிருக்கும் எனவும் தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோதாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, மக்களுக்கு நன்மைபயக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் வேண்டும் என கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் தமக்கு ஏற்ற ஏனைய விடயங்களை அதேபெரும்பான்மை இல்லாமலேயே மேற்கொண்டு வருகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் வளங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. 

அந்த வகையில் எமது ஆட்சிக்கும் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை நாட்டு மக்கள் நன்கு விளங்கி கொண்டுள்ளனர். நாம் ஆட்சிக்கு வந்த பிறகு மஹிந்த அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு நாட்டு மக்களுக்கு தேவையாக அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். 

100 நாள் வேலைத் திட்டத்தின் ஊடாக பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். அத்துடன், அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்புகளை செய்திருந்தோம். அரச ஊழியர்களக்கான சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்திருந்தோம். 

ஆயினும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளின் விளைவாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. அத்துடன், அதனை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையையும் அரசாங்கத்தினால் மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் நாம் ஆரம்பித்த அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைக்கும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. 

ஆகவே, மக்கள் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் அனைத்து நடைமுறைகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் ஊடாக தமக்கு ஏற்ற வகையிலான நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. 

ஆகவே, இந்த அரசாங்கத்தினால் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. அதேவேளை, வெளிநாடுகளுடனான நல்லுறவை பேண இந்த அரசாங்கத்தினால் முடியாது போயுள்ளது. ஆகவே, இந்த அரசாங்கத்தை பொதுத் தேர்தலில் வெற்றி கொள்வது இலகுவான காரியமாகும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment