எம்மீது பழியைப் போட்டால் தாம் தப்பிப்பிழைக்கலாம் என்று அரசு எண்ணுகின்றது - அரசை ஐ.நாவும் அதன் உறுப்பு நாடுகளும் சும்மாவிடாது - News View

Breaking

Post Top Ad

Saturday, February 29, 2020

எம்மீது பழியைப் போட்டால் தாம் தப்பிப்பிழைக்கலாம் என்று அரசு எண்ணுகின்றது - அரசை ஐ.நாவும் அதன் உறுப்பு நாடுகளும் சும்மாவிடாது

"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக ஜெனிவாவில் அரசு வாய்ச்சவடால் மட்டும்தான் விட்டிருக்கின்றது. ஆனால், அரசை ஐ.நாவும் அதன் உறுப்பு நாடுகளும் சும்மாவிடாது. அவை செயலில் பதிலடியை வழங்கியே தீரும். அதனால் எமது நாடும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்கக்கூடும்"

இவ்வாறு கடும் எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டினார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான மங்கள சமரவீர.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 40/1, 30/1 மற்றும் 34/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து அரசு விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஜெனிவாக் கூட்டத் தொடரில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது "எமது அரசு (ரணில் அரசு) நாட்டின் ஜனநாயக நடைமுறைகளை மீறி - அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஆலோசிக்காமல் அரசமைப்புக்கு விரோதமாகவே ஐ.நாவின் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கியது என ஜெனிவாவில் வைத்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இப்படி எம்மீது பழியைப் போட்டுவிட்டதால் தாம் தப்பிப்பிழைக்கலாம் என்று அரசு எண்ணுகின்றது.

ஆனால், இந்த அரசு இப்படிக் கூறித் தப்பமுடியாது. ஐ.நாவும் அதன் உறுப்பு நாடுகளும் இந்த அரசை சும்மாவிடாது. அவை செயலில் பதிலடியை வழங்கியே தீரும். அதனால் எமது நாடும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும்.

அரசின் சுயநல அரசியல் தேவையால் சர்வதேச அரங்கில் எமது நாடு தனிமைப்படுத்தப்படவுள்ளது. அதேவேளை, எமது நாடு மோசமான பொருளாதார நெருக்கடியையும் சந்திக்கக்கூடும். ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைகூட மீண்டும் இடைநிறுத்தப்படலாம்.

போர் நிறைவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி - தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தாலேயே சர்வதேசப் பொறிமுறை விசாரணையை இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபை கொண்டு வந்தது. அந்த இக்கட்டான நிலையில்தான் சர்வதேச உறவைப் பலப்படுத்தும் வகையில் தீர்மானங்களுக்கு எமது அரசு (ரணில் அரசு) இணை அனுசரணை வழங்கியிருந்தது.

நாம் இணை அனுசரணை வழங்கியபடியால்தான் ராஜபக்ச குடும்பத்தி னரும், இராணுவ அதிகாரிகளும் மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். அதுமட்டுமல்ல எமது நாட்டின் மரியாதையும் சர்வதேச அரங்கில் காப்பாற்றப்பட்டது.

இப்படியான நன்மைகளை நாம் செய்துள்ள போதிலும் இலங்கை யை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுத்துவிட்டோம் என்று ராஜபக்ச அணியினர் எம்மைத் திட்டுகின்றார்கள். அதேவேளை, தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் எம்மைக் கைதுசெய்து சிறையில் அடைக்குமாறும் அந்த அணியிலுள்ள ஒருசிலர் அரசிடம் கோரிக்கை விடுத்து ள்ளனர். இதைப் பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று எமக்குத் தெரியவில்லை.

ஆனால், சர்வதேசத்தை இந்த அரசு பகைத்துள்ளதால் இலங்கை பாரிய பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை மட்டும் இப்போது உறுதியாகக் கூறுகின்றோம்" - என்றார்.

Ariyakumar Jaseeharan

No comments:

Post a Comment

Post Bottom Ad