பெருந்தோட்ட பாடசாலை அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவி - உடன்படிக்கை கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

பெருந்தோட்ட பாடசாலை அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவி - உடன்படிக்கை கைச்சாத்து

பெருந்தோட்ட பாடசாலைகளின் உட்கட்டமைப்பினை மேலும் அபிவிருத்தி செய்யும் இலக்குடன் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் திரு. வினோத் கே ஜேக்கப் மற்றும் இலங்கை கல்வி அமைச்சின் செயலாளர் திரு.என்.எச்.எம்.சித்ரானந்தா ஆகியோர் நேற்றுமுன்தினம் 20ஆம் திகதி கொழும்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர். 

இலங்கை அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்ட 9 பெருந்தோட்ட பாடசாலைகள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன. 

மத்திய மாகாணத்தில் ஆறு பெருந்தோட்ட பாடசாலைகளும் அதேபோல சப்ரகமுவா, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் தலா ஒவ்வொரு பாடசாலைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளடங்குகின்றன. 

கல்வித்துறையில் இலங்கை இந்தியா இடையில் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கும் நோக்குடன் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இந்திய அரசாங்கம் கல்வித்துறை சார் திட்டங்களை பரவலாக அமுல்படுத்தி வருகின்றது. 

இந்திய நிதியுதவியின் கீழ் வட மாகாணத்தில் பல்வேறு பாடசாலைகளில் கட்டடங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதுடன் புனரமைப்பும் செய்யப்பட்டன. 

2020 ஜனவரி 15ஆம் திகதி 5 பாடசாலைகளின் புதிய பாடசாலை கட்டடங்கள் சம நேரத்தில் இலங்கை மக்களிடம் கையளிக்கப்பட்டன. 

ருஹுண பல்கலைக்கழகத்தில் இலங்கையில் பாரிய பல்கலைக்கழக கேட்போர் கூடம் இந்தியாவால் அமைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல மருந்தியல் தாதி மற்றும் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞான துறைகளில் சிறந்த பெறுபேற்றினை பெறும் மாணவர்களுக்காக 2020 ஜனவரி மாதம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தங்கப்பதக்கம் ருஹுண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் விவசாய மற்றும் பொறியியல்பீடம் இந்தியாவால் ஸ்தாபிக்கப்பட்டது. 

இதற்கு மேலதிகமாக இலங்கையிலும் இந்தியாவிலும் பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு மற்றும் கலாநிதி கற்கை நெறிகளை தொடர்வதற்காக வருடாந்தம் 750க்கும் அதிகமான இலங்கை மாணவர்களுக்கு இந்தியா புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றது. 

மக்களை இலக்கு வைத்த அபிவிருத்தி திட்டங்களாக இந்த திட்டங்கள் இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்திய அரசாங்கத்தால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதுவரை இந்திய அரசாங்கம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவி திட்டங்களை இந்திய அரசாங்கம் இலங்கைக்கான அபிவிருத்தி உதவியாக வழங்கியுள்ளது இதில் 560 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவித்திட்டங்கள் முற்றுமுழுதான நன்கொடையாக வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment