தனக்கு நியமனம் மொட்டிலா, நாற்காலியிலா என்றுக்கூட தெரியாத எஸ்.பி. திசாநாயக்க, இராதாவை பற்றி உளறுகிறார் - மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2020

தனக்கு நியமனம் மொட்டிலா, நாற்காலியிலா என்றுக்கூட தெரியாத எஸ்.பி. திசாநாயக்க, இராதாவை பற்றி உளறுகிறார் - மனோ கணேசன்

எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன், எமது கூட்டணியின் சார்பில் நாம் உருவாக்கிவரும் புதிய எதிரணி கூட்டணியில் நுவரேலியா மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெறுவார். அதை நமது கூட்டணியும், கூட்டணி கட்சியான மலையக மக்கள் முன்னணியும், நமது மக்களும் கவனித்து கொள்வார்கள்.

எஸ்.பி.திசாநாயக்க, தனக்கு எங்கே வேட்பாளர் நியமனம் கிடைக்க போகின்றது என்பதை பற்றி கவலை பட வேண்டும். அவரது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி கழற்றி விட்டு விட்டது. எனவே மொட்டுக்கும், நாற்காலிக்கும் இடையில் வௌவால் போல பரிதவித்து தொங்கும் எஸ்.பி. திசாநாயக்க, முதலில் தன்னை பற்றி கவலைப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்பி, தங்களுடன் இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்துகிறார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கூறியிருந்தார். அவருக்கு பதிலளித்த கூட்டணியின் பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன் எம்பி, திசாநாயக்காவின் கூற்றை மறுத்து, தான் அத்தகைய எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என மறுத்து தான் கூட்டனியின் வேட்பாளாராக புதிய எதிரணி கூட்டணியிலேயே போட்டியிட போவதாக கூறியிருந்தார். 

இது பற்றி கூட்டணி தலைவர் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, கடந்த தேர்தலில் தோல்வியடைந்து, பின்னர் நாம் பதவிக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபாலாவின் தோளில் தொங்கி, தேசியப் பட்டியல் நியமனம் பெற்று, பாராளுமன்றம் வந்து, எமது அமைச்சரவைக்குள்ளும் நுழைந்து எமது அரசை நாசம் செய்த எஸ்.பி.திசாநாயக்க, தேர்தலில் வெற்றி பெற்று வந்த எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது.

எஸ்.பி.திசாநாயக்க, அரசியல் தகிடுதத்தம் செய்து இந்த முறையும் எவரது தோளிலாவது சவாரி செய்து பாரளுமன்றம் வர எத்தனிப்பது நன்கு தெரிகிறது. இம்முறை தோள் பாய்ச்சலுக்கு இடம் கிடையாது. சொந்த முயற்சியில்தான் வர வேண்டும். 

இந்த முறை எஸ்.பி. திசாநாயக்கவுக்கு தேசியப் பட்டியல் நியமனம் எதுவும் கிடைக்கப் போவதும் இல்லை என்பது நிச்சயம். மொட்டா, நாற்காலியா என்ற இறுதித் தீர்மானமும் இதுவரை இல்லை. இந்நிலையில் தனது எதிர்காலமே கேள்விக்கு உள்ளாகி இருக்கும் வேளையில் அடுத்தவரை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு, தன்னை பற்றி அவர் கவலைப்பட வேண்டுமென நினைக்கிறேன்.

No comments:

Post a Comment