இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு 8 மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு 8 மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு 8 மனித உரிமை அமைப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாரை கேட்டுக் கொண்டுள்ளன. 

மனித உரிமை கண்காணிப்பகம், மன்னிப்புச் சபை உட்பட எட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிற்கு கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. 

இலங்கையில் மனித உரிமை விடயத்தில் குறிப்பிடத்தக்க பின்னோக்கி நகர்வுகள் இடம்பெறுகின்றன என்பதற்கான அறிகுறிகள் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம் என எட்டு மனித உரிமைகள் அமைப்புகளும் தெரிவித்துள்ளன. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதாக அரசாங்கம் ஆற்றியுள்ள உரை இதனை உறுதி செய்வது போல காணப்படுகின்றது என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

அரசமைப்பின் 19 வது திருத்தத்தை மாற்றும் இலங்கை அரசாங்கத்தின் முடிவு நீதித் துறையினதும் ஏனைய ஆணைக்குழுக்களினதும் சுதந்திரத்தை பாதிக்கும், இலங்கை அரசாங்கம் காணாமல் போனோர் குறித்த அலுவலக சட்டம் குறித்து மீள் பரிசீலனை செய்கின்றது. 

இதேபோன்று சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் காணமல் போனவர்கள் குறித்து ஜனாதிபதி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஈவிரக்கமற்ற கருத்து காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு மேலும் துயரத்தை அளித்துள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

சர்வதேச சட்டங்களை மீறியதாக இலங்கை தொடர்பான அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை குறித்த மனித உரிமை ஆணையாளரின் கரிசனையை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம் என 8 அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

2019 நவம்பர் முதல் அரச சார்பற்ற அமைப்புகளை கண்காணிக்கும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அவர்களின் கண்காணிப்பு ஆபத்து அதிகரித்துள்ளது, பல மனித உரிமை அமைப்புகளிற்கும் ஊடகங்களிற்கும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் அச்சுறுத்தும் விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். பத்திரிகையாளர்களிற்கு எதிரான மரண அச்சுறுத்தல்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளன எனவும் சர்வதேச அமைப்புகள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளன. 

இலங்கையில் மீண்டும் அச்சசூழல் தோன்றியுள்ளது குறிப்பாக உண்மை நீதி பொறுப்புக்கூறலிற்காக குரல் கொடுப்பவர்களிற்கு அச்சூழ்நிலை திரும்பியுள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

ஐக்கிய நாடுகள் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட தெளிவான கட்டமைப்புகளை ஏற்று நடக்கப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதால் இலங்கையை சர்வதேச சட்டங்களின் கீழான அதன் கடப்பாடுகளின் அடிப்படையில் பொறுப்புறக்கூறலிற்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad