ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் தினேஷ் 26, 27 ஆம் திகதிகளில் உரை - இலங்கையின் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு - இலங்கை குழு நாளை பயணம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 22, 2020

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமைச்சர் தினேஷ் 26, 27 ஆம் திகதிகளில் உரை - இலங்கையின் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு - இலங்கை குழு நாளை பயணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளதுடன், இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று ஜெனீவா செல்கிறது.

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாளைய தினம் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளதுடன், 30/1 தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையை இலங்கை வாபஸ் பெறப் போவதாக பகிரங்கமான வெளிப்படுத்தல்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அவரது உரையில் வெளிப்படுத்துவாரென சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் ஐக்கிய அமெரிக்காவால் இலங்கையின் இணை அனுசரணையுடன் 30/1 தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இத் தீர்மானத்தின் பிரகாரம் அதில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்கள் இரண்டு வருட காலப்பகுதிகள் அதாவது 2017 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதத்திற்குள் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச பங்களிப்புடன் விசாரணை பொறிமுறை, காணாமல் போனோர் அலுவலகத்தை ஸ்தாபித்தல், நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தல், இனப் பிரச்சினைக்கு தீர்வு, நிலைமாறுகால நீதி உட்பட பல்வேறு பரிந்துரைகள் 30/1 தீர்மானத்தில் முன்மொழிப்பட்டன. என்றாலும், 2017 ஆம் ஆண்டு வரையான இரண்டு வருட காலப்பகுதியில் இத் தீர்மானத்தின் யோசனைகளை அப்போதைய அரசாங்கத்தால் அமுல்படுத்த முடியாது போனது.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 34 ஆவது கூட்டத் தொடரில் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் கோரியதன் அடிப்படையில் 34/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கைக்கு இரண்டு வருட காலம் அவகாசம் வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு 40 ஆவது கூட்டத் தொடருடன் இந்த இரண்டு வருட கால அவகாசம் முடிவடைந்திருந்த நிலையில் மீண்டும் இரண்டு வருட கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் கோரியது. அதனை கருத்தில் கொண்டு 40/1 கீழ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கைக்கு மேலும் இரண்டு வருட காலம் அவகாசம் வழங்கப்பட்டது.

அதன் பிரகாரம் 30/1 கீழ் தீர்மானத்தை அமுல்படுத்த இலங்கைக்கு 2021 ஆம் ஆண்டு வரை இரண்டு வருட காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. இப் பின்புலத்திலேயே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு 30/1 கீழ் தீர்மானம் மற்றும் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ள 40/1 கீழ் தீர்மானங்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த இணை அனுசரணையை நாளை ஆரம்பமாகவுள்ள 43 ஆவது கூட்டத் தொடரில் வாபஸ் பெற போவதாக அறிவித்துள்ளது.

அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதுடன், பாராளுமன்றத்திலும் அரசாங்கத்தின் தீர்மானத்தை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கை தொடர்பான இவ் விவாதம் நடைபெறவுள்ளது. இதன்போதே வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளார். 

அமைச்சர் தினேஸ் குணவர்தனா 26 மற்றும் 27ஆம் திகதிகளில் ஐ.நா. பேரவையில் உரையாற்றுவார் என்றும் வெளிவிவகார அமைச்சின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட வடக்கின் சில தமிழ் கட்சிகளின் முக்கியஸ்தர்களும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் ஜெனீவா நோக்கி விரைந்துள்ளனர். நாளை 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பேரவையின் கூட்டத் தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment