கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தலிருந்து தப்பியோடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு - 230 ரஷ்ய குடிமக்கள் சீனாவிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்ப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தலிருந்து தப்பியோடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு - 230 ரஷ்ய குடிமக்கள் சீனாவிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்ப்பு

ரஷ்யாவில் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தில் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் தப்பியோடியுள்ளார். 

கடந்த ஜனவரி 31 ஆம் திகதி சீனாவிலிருந்து ரஷ்யாவுக்கு திரும்பி வந்த அலா இல்லினா என்ற பெண் செயின்ட் பீட்டர்ஸ் பேர்க்கில் உள்ள தொற்று நோய்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா தொற்று தொடர்பான சோதனைக்குட்படுத்தப்பட்டார். 

இந்நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுதியின்றி தப்பிச் சென்றுள்ளதாக செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் வைத்தியசாலையின் தலைமை சுகாதார வைத்தியர் வியாழக்கிழமை தனது அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார். 

இல்லினாவின் கட்டாய தனிமைப்படுத்தல் காலமானது 14 நாட்களுடன் நிறைவுக்கு வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். 

இந்நிலையில் தனிமைப்படுத்தலை மீறி, ஏனையோருக்கு வைரஸை பரப்பும் விதமாக இல்லினா செயற்பட்டுள்ளார் என செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் வைத்தியசாலையின் தலைமை சுகாதார வைத்தியர், குயிபிஷெவ்ஸ்கி மாவட்ட நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் தொடர்ந்துள்ளார். 

எனினும் இந்த வழக்கினை எதிர்கொள்ளும் இல்லினா சீனா சென்று திரும்பியதும், தான் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்ட பல பரிசோதனைகளில் தனக்கு கொரோனா தொற்று இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றில் எடுத்துக் கூறியுள்ளார். எவ்வாறெனினும் இந்த வழக்கு தற்போது குயிபிஷெவ்ஸ்கி நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. 

இதேவேளை சுமார் 230 ரஷ்ய குடிமக்கள் சீனாவிலிருந்து நாடு திரும்ப தற்போது எதிர்பார்த்துள்ளதாக ரஷ்யாவின் மத்திய விமான போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுவரை ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் நுகர்வோர் கண்காணிப்புக் குழுவான நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வைக் கண்காணிப்பதற்கான பெடரல் சேவை தெரிவித்துள்ளது. 

இரண்டு நோயாளிகளும் ரஷ்யாவுக்குச் சென்ற சீன பிரஜைகள் ஆவர். அவர்களில் ஒருவர் குணமடைந்து வைத்தயசாலையை விட்டு வெளியேறிவிட்ட நிலையில் மற்றையவர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment