நாங்கள் போராட்ட காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம் - கருணா அம்மான் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

நாங்கள் போராட்ட காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம் - கருணா அம்மான்

எஸ்.எம்.எம். முர்ஷித்
நாங்கள் போராட்ட காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம். நான் கல்வியை வளர்ப்பதற்கு பாடுபட்டுள்ளேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் வாகரைப் பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு பால்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தில் (24) இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கல்வி என்பது ஒரு பொதுவான விடயம். நாங்கள் போராட்ட காலத்தில் கூட கல்விக்கான பல வேலைத் திட்டங்களை செய்தோம். நான் கல்வியை வளர்ப்பதற்கு பாடுபட்டுள்ளேன். அதில் போராட்டத்தில் கல்வி பிரிவை ஒரு அம்சமாக உருவாக்கி வைத்திருந்தேன்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கூடியளவு கல்வி வளர்ச்சிக்காக கல்விக் கழகம் என்ற நிறைய அமைப்புக்கள் செயற்பட்டது. போராட்ட காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தில் கல்வி அபிவிருத்திக் குழு என்று முதல் முதலாக ஆரம்பித்தோம்.
வாகரைப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளை தரமுயர்த்தி உள்ளோம். இன்னும் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். இதில் கூடுதல் கவனம் எடுத்து செயற்படுவேன் என்றார்.

வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரசிக்காந்தன், வாகரைப் பிரதேச பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், கட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்கள், எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, புணாணை, வட்டவான், காயான்கேணி, மாங்கேணி, மதுரங்குளம், கிருமிச்சை, வாகரை, பால்சேனை, கதிரவெளி, ஆலங்குளம், கட்டுமுறிவு, பனிச்சங்கேணி போன்ற பிரதேத்திலுள்ள பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்

No comments:

Post a Comment