சப்ரகமுவ மாகாணத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறை - 98 வைத்திய மத்திய நிலையங்களில் 205 வெற்றிடங்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 14, 2019

சப்ரகமுவ மாகாணத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறை - 98 வைத்திய மத்திய நிலையங்களில் 205 வெற்றிடங்கள்

சப்ரகமுவ மாகாணத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் கபில கண்ணங்கர தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்துக்குட்பட்ட இரத்தினபுரி மற்றும் கேகாலை பிரதான வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் உட்பட வைத்திய மத்திய நிலையங்கள் பலவற்றிலும் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் வைத்தியசாலை நிர்வாகத்தை மேற்கொள்ள முடியாது உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சப்ரகமுவ மாகாண வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. 

குறிப்பாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் தோல் சம்பந்தமான நோய்களுக்கு விசேட வைத்தியர்கள் இருக்கின்ற போதிலும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க மேலதிக வைத்தியர் ஒருவர் இல்லை. 

வெளிநோயாளர்கள் பிரிவில் 100 நோயாளர்களுக்கு ஒரு வைத்தியர் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அதேசமயம் சில வைத்தியசாலைகளில் வருடாந்த இடமாற்றம் பெறும் வைத்தியர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமனம் செய்யப்படுவதில்லை. 

சப்ரகமுவ மாகாணத்தில் 98 வைத்திய மத்திய நிலையங்களில் 205 வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது.

வருடாந்தம் பல்கலைக்கழகங்களில் இருந்து 1000 வைத்தியர்கள் அளவில் பயிற்சி பெற்று வெளியான போதிலும் சிலர் வெளிநாடுகளில் பணிபுரிய செல்கின்றனர். இன்னும் சிலர் தனியார் வைத்திய நிலையங்களுக்கு சேவைக்கு செல்கின்றனர். இதன் காரணமாக வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. 

வைத்தியர்களாக பணியாற்றும் சில மகளிர்கள் பிரசவ விடுமுறை பெறுவதாலும், சிலர் பட்டப்படிப்பு பயிற்சி நெறிக்கு விடுமுறை பெற்றுக் கொள்வதாலும் இவ்வாறு வைத்தியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

(பலாங்கொடை நிருபர்)

No comments:

Post a Comment