பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - பாராளுமன்றம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 14, 2019

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - பாராளுமன்றம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புக்கள்

நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் 20 இலட்சம் ரூபா வீதமும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 20 மில்லியன் ரூபா வீதமும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நிதி ஒதுக்கியுள்ளார். 

இவ் அபிவிருத்தி பணிகளை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் பணிப்புரை பிறப்பித்தார். 

மேலும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 700 வேலைவாய்ப்புக்களை வழங்கவும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு 100 வேலைவாய்ப்புக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் அரசாங்கத்தின் அனைத்துப் பங்காளிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

இதன்போது பாராளுமன்றக் கூட்டத் தொடர், தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இதன்போதே ஜனாதிபதி மேற்படி விடயங்களை குறிப்பிட்டார். 

இங்கு கலந்துரையாடலில் ஜனாதிபதி மேலும் கூறுகையில், பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். 

வற் வரி, தேசத்தை கட்டியெழுப்பும் வரி உட்பட அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் பொதுமக்களுக்குச் சென்றடைந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறிப்பிட்டார். 

இதேவேளை இச்சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சந்திம வீரக்கொடி, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல தீர்மானங்களை எடுத்துள்ளார். வறுமையில் வாழும் மக்களை நோக்காகக் கொண்டு அவரது அபிவிருத்தித் திட்டங்கள் அமைந்துள்ளன. நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்த யுகமே உருவாகியுள்ளது என்றார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment