வாழைச்சேனை வைத்தியசாலையின் குறைகள் தீர்க்கப்படாவிட்டால் வீதியில் இறங்கிப் போராடும் நிலை வரலாம் - பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

வாழைச்சேனை வைத்தியசாலையின் குறைகள் தீர்க்கப்படாவிட்டால் வீதியில் இறங்கிப் போராடும் நிலை வரலாம் - பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் தீர்க்கப்படவில்லையானால் தமிழ் முஸ்லிம் மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். என கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி தெரிவித்தார். 

இப்பிரதேசத்தின் மிக முக்கிய வைத்தியசாலையாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை காணப்படுகின்றது. இவ்வைத்தியசாலையை நம்பி பல்லாயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம் மக்கள் இருக்கின்ற நிலையில், இவர்களுக்குத் தேவையான வைத்திய சேவைகளை பூரணமாக வழங்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

மிக நீண்ட காலமாக இதன் தேவைகள், குறைபாடுகள் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் அங்கு அர்ப்பணிப்புடன் கடமை புரியும் வைத்திய அதிகாரிகள், தாதியர் மற்றும் ஏனைய அதிகாரிகள், உத்தியோகத்தர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும், ஊடகங்கள் பகிரங்கப்படுத்திய போதும் கடந்த காலங்களில் இருந்த சம்பந்தப்பட்ட அமைச்சர், இராஜாங்க அமைச்சர், மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் எவரும் இதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இவ்வைத்தியசாலையை நம்பி இருக்கும் ஏழை தமிழ், முஸ்லிம் மக்களின் நலனில் அக்கரை கொண்டு, இதன் குறைபாடுகள், தேவைகள் படிப்படியாகவேனும் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தமிழ், முஸ்லிம் மக்களையும் பிரதேச அமைப்புக்களை ஒன்று திரட்டி வீதியில் இறங்கிப் போராடியேனும் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.

மிகப்பழமை வாய்ந்த குறித்த வைத்தியசாலையில் அவசியப்பாடான அபிவிருத்திகளை மேற்கொள்ளாமை பின் தங்கிய நிலைக்கு செல்ல காரணமாக அமைந்துள்ளதுடன், இப்படியே கவனிப்பாரற்று விடப்படுமானால் வைத்தியசாலையை இழுத்து மூடும் நிலையும் ஏற்படலாம்.

இதனால் பாதிக்கப்படப் போவது இந்த வைத்தியசாலையை நம்பி இருக்கும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களே என்பதை மக்கள் பிரதிநிதிகள் கவனத்திற்கொண்டு குறித்த விடயத்தை பாராளுமன்றம் வரை கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டும்.

வெறுமனே தேர்தல் காலங்களில் மட்டும் மக்கள் முன் தோன்றி வாக்கு சேகரிக்கும் செயற்பாட்டை இனி மேலும் அனுமதிக்க முடியாது.

இதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தராத எந்த பாராளுமன்றப் பிரதிநிதிகளையும் எதிர்காலத் தேர்தல்களில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

மக்கள் உயிர்வாழத் தேவையான சுகாதார வசதிகளைப் பெற்றுத்தர முன் வராத அரசியல்வாதிகள் விடயத்தில் மக்கள் கடுமையான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.

குறித்த வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை A தரத்தில் இருந்தாலும் அதற்கான எந்த வசதிகளும் இல்லை என்பது கவலையான விடயமே.

இவ்வைத்தியசாலையில் வருடாந்தம் சுமார் 25000 நோயாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான சேவையை வழங்க சுமார் 45 வைத்திய அதிகாரிகள் தேவையாகவுள்ள போதும் 16 வைத்தியர்களே உள்ளனர். அவர்களும் பல தியாகங்களுக்கு மத்தியிலேயே சேவைகளை வழங்கி வருகின்றனர்.

தாதி உத்தியோகத்தர்கள் 80 பேர் இருக்க வேண்டிய சூழலில் 36 பேரே உள்ளனர். ஏனைய உத்தியோகத்தர்கள் 140 பேர் அவசியமான நிலையில், 72 பேரே உள்ளனர். இவ்வாறு ஆளனிப்பற்றாக்குறை காணப்படுவதுடன், நோயாளிகளை காவிச்செல்லத்தேவையான அம்பியுலன்ஸ் வண்டிகள் 3 இங்கு காணப்பட்ட போதிலும், ஒன்று பழுதடைந்த நிலையிலும் மற்றொன்று பாவிக்க முடியாத நிலையிலும் தற்சமயம் ஒரேயொரு அம்பியுலன்ஸ் வண்டியே சேவையில் உள்ளது.

இதன் மூலம் போதுமான சேவையை வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதுடன், அண்மையில் வழங்கப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டிகளில் ஒன்றையேனும் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு வழங்கி இருந்தால் மிகவும் நன்மையடையக்கூடிய வகையில் அமைந்திருக்கும் அதிலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை.

அத்துடன், இங்கு காணப்படும் பிண அறை கூட போதுமான வசதிகளுடன் இல்லை. மின்வசதிகளோ உடலங்களை வைக்கத்தேவையான குளிரூட்டிகளோ இல்லை. இங்குள்ள இரு குளிரூட்டிகளில் ஒன்று பழுதடைந்து காணப்படுவதுடன், மற்றயதில் இரு உடலங்களையே வைக்க முடியுமாக உள்ளது.

அத்தோடு, எக்ஸ் ரே இயந்திரம் பழுதடைந்து திருத்தப்பட்டவில்லை. அதேநேரம், மின்சாரமின்மையால் இரவு நேரங்களில் எதுவித கடமைகளையும் மேற்கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது.

சுமார் ஒரு இலட்சத்து எண்பதினாயிரம் சனத்தொகை, மாவட்டத்தின் 40 வீத சனத்தொகைக்கு வைத்திய சேவையை வழங்க வேண்டிய குறித்த வைத்தியசாலை ஐந்து பிரதேச செயலகப்பிரிவுகள் மூன்று பிரதேச சபை எல்லைகள் என கல்குடா தொடக்கம் சித்தாண்டி வரை வெருகல், கதிரவெலி, லங்கா பட்டிணம், ரிதிதென்ன, ஜெயந்தியாய, புணானை, பொத்தானை, வாகனேரி, வாழச்சேனை உள்ளடங்கலான பிரதேச மக்களுக்கு பூரண வைத்திய சேவையை வழங்க வேண்டுமாக இருந்தால் இவ்வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

அத்தோடு கடந்த இரண்டு மாதங்களால் பெண் நோயாளர் பிரிவில் பெண்ணியல் நோய் நிபுணர் இல்லாத நிலையும், சிறுவர் வைத்தியர், சட்ட வைத்தியர் முற்றாக இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

இவ்வாறு பல குறைபாடுகளைக் கொண்டுள்ள வைத்தியசாலையை தரமுயர்த்துவதால் மட்டும் எதனையும் சாதித்து விட முடியாது. ஆகவே, இப்பிரதேச ஏழை மக்களின் நலனைக்கருத்திற் கொண்டு இதன் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

வீணே காலங்கள் இழுத்தடிக்கப்படுமாக இருந்தால் மக்களுக்கான உயிர் வாழும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறங்கிப் போராடும் நிலை ஏற்படலாம். என கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment