மக்கள் வழங்கிய ஆணையை மீறாமல் செயற்பட வேண்டுமென சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

மக்கள் வழங்கிய ஆணையை மீறாமல் செயற்பட வேண்டுமென சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

மக்கள் வழங்கிய ஆணையை மீறாமல் செயற்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூன்று விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள சஜித் பிரேமதாச, இடம்பெறும் சில சம்பவங்கள் அமைதியான சமூகத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அதிகாரியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் நாட்டின் இராஜதந்திர வரலாற்றில் கரும்புள்ளி எனவும் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேர்மையான மற்றும் திறமையான பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு எதிராக பழிவாங்கல் நடவடிக்கைகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் சிலர் மீதும் தற்போது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

கருத்து சுதந்திரத்திற்கும் தகவல் அறியும் உரிமைக்கும் எதிராக அரச பொறிமுறை செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை பாதுகாத்தல், பழிவாங்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் நாட்டை சர்வதேசத்தின் மத்தியில் முன்னோக்கி கொண்டு செல்தல் போன்ற வாக்குறுதிகளுக்கு அமைய, மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் செயற்படுவது கவலையளிப்பதாக சஜித் பிரேமதாச அறிக்கையினூடாக தெரித்துள்ளார்.

பக்கசார்பற்ற, சட்டத்திற்கு மதிப்பளித்த அதிகாரிகளை அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தியமை மற்றும் ஊடகவியலாளர்கள், நிறுவனங்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்துதல் ஆகியன 2015 இக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட இருண்ட யுகத்தை நினைவுபடுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த கவலைக்குரிய நிலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனிப்பட்ட ரீதியில் கவனம் செலுத்த வேண்டுமென சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களுக்கு வாக்குறுதியளித்த சுதந்திரமானதும் நீதியானதுமான நாட்டை கட்டியெழுப்புமாறும் மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு அரச பொறிமுறையை பயன்படுத்த வேண்டாம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment