கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் - பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 17, 2019

கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் - பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

அரச நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில், அடுத்த வாரம் விசேட பேச்சுவார்த்தையை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்க இருப்பதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக கல்வி ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நிதியமைச்சில் நேற்று (16) இடம்பெற்றது. 

இதற்காக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதேவேளை, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கருத்து வெளியிடுகையில், நிறைவேற்று அதிகாரிகளின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவை உபகுழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இதன் பின்னர் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் கடந்த வாரம் முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளமை தெரிந்ததே. 

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் நேற்று 7 ஆவது நாளாகவும் நீடித்ததோடு இதனால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நேற்றும் பாதிக்கப்பட்டன.

No comments:

Post a Comment