இலங்கை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் : இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, August 23, 2019

இலங்கை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் : இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

6 தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது, பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தவுள்ளதாக மத்திய உளவுத்துறை, தமிழக பொலிஸ் தலைமை அதிகாரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தமிழக பொலிஸ் தலைமைய ஆணையாளர் திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய, நேற்று (22) நள்ளிரவு முதல் பலத்த கண்காணிப்பு பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கியமாக தமிழகத்திற்கு பிரவேசிக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களிலுள்ள மதஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் குறிப்பிடுகின்றன.

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், இலங்கையை சேர்ந்த 5 பேர் அடங்கலாக 6 பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

லக்-ஷர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களே தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல் நடத்தியவர்களுடன் தொடர்புடையவர்களே தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை, பயங்கரவாதிகள் கோவையில் ஊடுருவி இருப்பதாக தகவல் பதிவாகியதை அடுத்து, கோவை மாநகரம் முழுவதும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment