இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 23, 2019

இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி நியமனம்

இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று 23ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன் இராணுவத் தளபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக இதுவரை காலம் சேவையாற்றி வந்த லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த 18ஆம் திகதி முதல் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே இராணுவத்தின் 54ஆவது பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவரான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே, 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன் தியத்தலாவையிலுள்ள இராணுவ அகடமியில் ஆரம்ப பயிற்சியினை முடித்துக்கொண்டு 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி இராணுவ கவச படையின் இரண்டாம் லெப்டினன்டாக வெளியேறிய அவர் 35 வருட சேவைக் காலத்திற்குள் இராணுவத்தின் உயர் பதவிகள் பலவற்றை வகித்து வந்துள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது இராணுவத்தின் மூன்றாவது செயலணியின் கட்டளை தளபதியாக செயற்பட்டு பல்வேறு துறையில் திறமைகளை வெளிக்காண்பித்த இவர், இராணுவத்தின் 52, 64 மற்றும் 55 காலாட்படைப் பிரிவுகளின் கட்டளை தளபதியாகவும் வடக்கு மற்றும் கிழக்கின் இராணுவ உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலகத்தின் கேர்ணலாகவும், யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகத்தின் பிரிகேடியர் ஜெனரல் தர அதிகாரியாகவும், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அலுவலகத்தின் நடவடிக்கை பணிப்பாளர் நாயகமாகவும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ தொடர்பு அதிகாரியாக சேவையாற்றி போன்ற முக்கிய பதவிகளை வகித்து வந்த இவர் இறுதியாக இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் கட்டளை தளபதியாக சேவையாற்றி வந்த நிலையிலேயே இந்த இராணுவத் தளபதிக்கு பின்னரான இரண்டாவது இடமாக கருதப்படும் இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலுள்ள பாதுகாப்பு சேவைகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் கல்லூரிகளில் இராணுவ துறைசார் கற்கைநெறிகளை முடித்துள்ள இவர் இராணுவத்தின் உயர் விருதுகள் பலவற்றை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்

No comments:

Post a Comment