பிக்குவின் அடாவடி! நந்தி கொடிகளை அறுத்தெறிந்து மீண்டும் அட்டகாசம்! நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தொடர்ந்தும் பதற்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2019

பிக்குவின் அடாவடி! நந்தி கொடிகளை அறுத்தெறிந்து மீண்டும் அட்டகாசம்! நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தொடர்ந்தும் பதற்றம்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன.

கடந்த (06.07. 2019) அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது.

இந்த பொங்கல் நிகழ்வின் போது ஆலய சூழலை அலங்கரிப்பதற்காக ஆங்காங்கே வீதியின் ஓரமாக வீதியின் மேலாகவும் நந்தி கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நந்திக்கொடிகளை கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் இன்று (17) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாக செயலாளர் சி.ராஜா, நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக குரு கந்த ரஜமகா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து பிரம்மாண்ட புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக கடந்த மாதங்களில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் இரண்டு தரப்பினரும் அமைதியான முறையில் தமது ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பௌத்த பிக்கு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
அன்றைய தினம் மேல் நீதிமன்றின் வழக்கு விசாரணையின் போது குறித்த எமது பிள்ளையார் ஆலய பகுதியில் ஆலய நிர்வாகத்தினரோ பௌத்த பிக்குவோ எவ்வாறான அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே அங்கே இருக்கின்ற அமைப்புகள் அப்படியே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக பௌத்த பிக்கு எமது ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நந்திக்கொடிகளை மிகவும் கீழ்த்தரமான முறையில் அடாத்தாக அறுத்து வீதியோரத்தில் எறிந்திருக்கின்றார் அத்தோடு 24 மணித்தியாலமும் இந்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொலிஸார் கடமையில் இருக்கின்றார்கள்.

ஆலயம் இருக்கின்ற இடத்திற்கு எதிர்ப்பக்கமாக மிகவும் குறுகிய தூரத்தில் இராணுவக் காவலரண் ஒன்றை அமைத்து 24 மணி நேரமும் இராணுவத்தினர் கடமையில் இருக்கின்றார்கள். இவ்வாறு இவர்கள் எல்லோரும் கடமையில் இருக்கின்ற போது இந்த நந்தி கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளது.

அடாத்தாக எமது ஆலய பகுதியில் வந்து தங்கியிருந்து விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு மேலும் மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கின்றதை பொலிசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் செயற்பாடாகவே இந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ள சம்பவத்தை நாம் பார்க்கின்றோம். என தெரிவித்தார்.

Almashoora Breaking News

No comments:

Post a Comment