முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பிக்குமார்கள் களத்தில் இறங்கிய பொழுது அதனை தமிழர்கள் ஆதரித்தால், அது தமிழ் மக்களுக்கு எதிராக நிச்சயம் திரும்பும் என்று எச்சரிக்கை விடுத்தேன் இன்று அது இடம்பெறுகிறது - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 17, 2019

முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பிக்குமார்கள் களத்தில் இறங்கிய பொழுது அதனை தமிழர்கள் ஆதரித்தால், அது தமிழ் மக்களுக்கு எதிராக நிச்சயம் திரும்பும் என்று எச்சரிக்கை விடுத்தேன் இன்று அது இடம்பெறுகிறது

அரசாங்கத்தை காப்பாற்றுவதில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும் அக்கறை தனது சொந்த தொகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக பிக்குமார் முன்னெடுத்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் காட்டாமல் இருப்பது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என ஜனநயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது, இன்று நாட்டில் முக்கியமான பிரச்சினையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கன்னியா விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இல்லாவிடில் இது ஒரு இனக்கலவரத்தை நோக்கி நகரக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே, இது சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேசி முடிவெடுக்க வேண்டிய தேவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உள்ளது. 

குறிப்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு பாரிய கடப்பாடு உள்ளது. 

கடந்த சில வருட காலமாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றி வரும் இவர் இந்த பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க தவறுவாரேயாயின் வரலாறு இவரை மன்னிக்காது. குறைந்த பட்சம் இந்து கலாச்சார அமைச்சரிடம் கூட இவர் இது சம்பந்தமாக கலந்துரையாடவில்லை என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். 

ஆகவே, இவ்வாறான செயல்பாடுகளை நிறுத்தி இப்பிரச்சினையில் நேர்மையான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த பிக்குமார்கள் களத்தில் இறங்கிய பொழுது அதனை தமிழர்கள் ஆதரித்தால், அது தமிழ் மக்களுக்கு எதிராக நிச்சயம் திரும்பும் என்று நான் ஊடகங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுத்திருந்தேன். இன்று அது இடம்பெற்று வருகின்றது. 

ஆகவே அரசியலில் பௌத்த பிக்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி எதிர்க்கட்சியும் சரி சிங்கள பௌத்த வாக்குகளுக்கு பயந்து நேர்மையான முறையில் செயல்படுவதற்கு தயங்குகின்றார்கள். 

அதே நேரம் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியது போல் இந்த கன்னியா விவகாரத்தில் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் ஜனநயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment